ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலத்திலுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், காயமடைந்த பக்தர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க கோரி ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்திலுள்ள மேட்பல்லி பகுதியில் இருந்து சுமார் 88 ஐயப்ப பக்தர்கள் இரண்டு வேன்களில் கேரளா சென்றனர். அதில், 44 பேர் சென்ற வேன், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள லஹா என்னும் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கேரள மாநிலத்தில் விபத்து ஏற்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் காயமடைந்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த விபத்தில் 18 பக்தர்கள் காயமடைந்த நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் கோட்டையம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சப் பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட தேவைகள் செய்துகொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த மருத்துவத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் அய்யர், மாவட்ட காவல் ஆணையர் ஸ்வப்னில் மதுகர் மகாஜன் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் - வைரலாகும் வீடியோ!