ராயகடா(ஒடிசா): ஒடிசாவில் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் ரஷ்ய எம்.பி.யும், அதிபர் புதினை விமர்சிப்பவர் என்றும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசாவுக்கு சுற்றுலா வந்த 4 ரஷ்யப் பயணிகள் ரயகடா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ரஷ்ய சுற்றுலாப் பயணி விளாடிமர் புடனாவ் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு நாள் இடைவெளியில் மற்றொரு ரஷ்யப் பயணியும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். விடுதியின் மாடியில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் தங்கியிருந்த 3ஆவது மாடியின் அறை ஜன்னல் வழியாக குதித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவதாக உயிரிழந்த சுற்றுலாப்பயணி பவெல் அன்டனவ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் ரஷ்யாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பவெல் அன்டனவ் ரஷ்ய அதிபர் புதினின் எதிர்ப்பு விமர்சகர் என்றும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த பவெல் அன்டனவ்: ரஷ்யாவில் இறைச்சி விற்பனை தொழில் செய்து வரும் பவெல் அன்டனவ், விளாடிமர் பிராந்தியத்தின் பெரும் செல்வந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். ஆரம்பத்தில் அதிபர் புதினை ஆதரித்து வந்த பவெல், உக்ரைன் போரின்போது சொந்த நாட்டின் மீது பல்வேறு விமர்சனங்களை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் போரை பயங்கரவாதம் என தன் சமூக வலைதளப் பக்கத்தில் பவெல் பதிவு செய்தது ரஷ்யாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக பவெல் அந்தப் பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது 65-வது பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் இந்தியா வந்த போது அவர் உயிரிழந்துள்ளார். இவரும் வந்த விளாடிமர் புடனாவ் கடந்த 21ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நண்பர் உயிரிழந்ததால் மன விரக்தியில் இருந்த பவெல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் உயிரிழந்தது பவெல் தான் என ரஷ்ய பிராந்திய நாடாளுமன்றம் உறுதிபடுத்தி உள்ளது. அதிபர் புதினின் விமர்சகர் என்ற காரணத்தால் அவர் கொல்லப்பட்டாரா என யூகங்கள் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுடன் வந்த மற்ற இருவரை விசாரணைக்காக இந்தியாவில் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: Video: பூட்டிய அறையில் பெண்ணிடம் மல்லுக்கட்டிய போலீசார்!