ராய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் அபராதம் ரூ.100இல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,419 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெருந்தொற்று நோய் திருத்தச் சட்டத்தின் விதிகள் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் பயணிப்போரிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். இந்தத் அபராதத் தொகை, முன்னர் ரூ.100 ஆக இருந்தது. மேலும் மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க், பஸ்தர், ராய்கார்க் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மதுபானக் கூடங்கள், கோயில் திருவிழாக்கள், மத நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள், அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், பொருள்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 769 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகியுள்ளனர். 4 ஆயிரத்து 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 330 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், ராய்ப்பூர், துர்க் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாகும்.
இதையும் படிங்க: கோவிட்-நெருக்கடி: பேராபத்தில் இந்திய காசநோயாளிகள்!