சின்சுரா: மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கால்களுக்கு பஞ்சாயத்து உறுப்பினர் மசாஜ் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 20ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஷித் மஜூம்தார், தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பொதுக் கூட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. அஷித். அன்றிரவு தேப்னாநதபூர் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில், உள்ளூர் பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமா ராய் பால், எம்.எல்.ஏ. அஷித்தின் கால்களுக்கு மசாஜ் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
மேலும் புகைப்படத்தில், "தலைப்புகள் தேவையில்லை. அவர் என் வழிகாட்டி என்று மட்டும்தான் சொல்வேன். என் கடவுள். அவருக்கு சேவை செய்ததற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி, மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள், கட்சி உறுப்பினர்களை அடிமைகள் போல் நடத்துவதாக மாநில பா.ஜ.க.வினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதேநேரம் பா.ஜ.க.வினர் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. அஷித் மஜூம்தார், சமீபத்தில், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும் கூறினார்.
மேலும் கட்சித் தொண்டர்கள் தனது நலம் விரும்பிகள் என்றும், கட்சியினருக்கு நான் தந்தையைப் போன்றவன் என்றும் கூறினார். அவர்கள் என்னைக் கவனித்துக் கொண்டால் தவறில்லை என்றும் ரூமா தன் மூத்த சகோதரனைப் பார்த்துக் கொண்டது போல் தன்னிடம் நடந்து கொண்டதாகவும்; அதில் தவறில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிபிசி சர்ச்சை ஆவணப்படம் ஒளிபரப்பு - எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது.. போராட்டம்..