பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வருபவர் ரோகினி சிந்தூரி. தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தான், பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான ரூபா நேற்று (பிப்.19) தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஐஏஎஸ் அதிகாரி சிந்தூரியின் சில தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். இந்த புகைப்படங்களை, பணி விதிகளை மீறி, சக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிந்தூரி அனுப்பியதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன், சிந்தூரி மீது சில ஊழல் புகார்களையும் முன்வைத்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரம் அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை சிந்தூரி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "எனது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து சேகரித்து, ரூபா களங்கம் ஏற்படுத்துகிறார். நான் எனது புகைப்படங்களை சில அதிகாரிகளுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர்களது பெயர்களை ரூபா வெளியிட முடியுமா? தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக ரூபா பேசி வருகிறார். அவருக்கு மனநிலை சரியில்லை என நினைக்கிறேன். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.” என கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான சிந்தூரி, ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ மகேஷூடன் ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. அரசுத்துறை அதிகாரியான சிந்தூரி, எம்எல்ஏவை ஏன் சந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஜனேந்திரா கூறுகையில், ”இரு அதிகாரிகளின் செயலும் மோசமாக உள்ளது. இதை பார்த்து விட்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. இருவருக்குள்ளும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது ஊடகங்கள் வரை பரவி, பேசுபொருளாகிவிட்டது. இது சரியான பாதை அல்ல. இதே நிலை தொடர்ந்தால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். சசிகலா பெங்களூரு சிறையில் இருந்த போது, விதிகளை மீறி ஷாப்பிங் சென்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அந்த புகாரை கூறியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும் - உத்தவ் தாக்கரே ஆவேசம்