மைசூரு (கர்நாடகா): நேற்று (மே 25) மைசூருவில் உள்ள சாந்தலா வித்யா பீட வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்டது. இதற்காக ஜப்பானில் இருந்து 2 ரோபோக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரோபோக்கள் தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அதனைப் பாரமரித்து நிர்வகிப்பதற்கு, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை, சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே, இந்த ரோபோ ஆசிரியர்களின் மூலம், பள்ளி மாணவர்களின் கற்றல் அளவை மேம்படுத்தவும், அவர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இந்த ரோபோ ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோ மூலமாக கற்பிக்கும் திட்டமானது, அவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ரோபோட்டிக் ஆசிரியர்கள் முறை, பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், எம்எல்ஏ எஸ்.ஏ.ராமதாஸ், மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணைய தலைவர் எச்.வி.ராஜீவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாகவே, பெங்களூரு மல்லேஸ்வரம் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கற்பிக்கும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் தயார்!