டெல்லி: இன்று (ஜனவரி 18) முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 32ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. ‘சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்த நிகழ்வு கடைபிடிக்கப்படும்.
சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும்.
சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள், படுகாயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 447 பேருக்கு எதிர்வினை: மத்திய அரசு
தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்வில், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடர் விபத்து சாலைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.