இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளை விலையை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது. பிப்ரவரி 4 ஆம் தேதிதான் சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.785 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.125 அதிகரித்துள்ளது. மக்களை கசக்கிப் பிழிந்து வரும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிவிட்டது. டீசல் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு காரணம் சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61% வரியும், மாநில அரசு 56% வரியும் விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையை குறைக்க முடியும். ஆனால் மக்கள் மீது சுமையை ஏற்றுவதில், மக்கள் விரோத மத்திய மாநில அரசுகள் போட்டி போடுகின்றன. எனவே, சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி அருகே வைக்க டாஸ்மாக் ஒன்றும் புத்தகக்கடை அல்ல!