டெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன், இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் ஹரியானா முன்னாள் கிரிக்கெட் வீரர் மிருனாங்க் சிங் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பைகள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி ரூ.1.63 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாகப் புகார் பதியப்பட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் கிரிக்கெட் வீரர் மிருனாங்க் சிங், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி தொழிலதிபரை ஏமாற்றி வழக்கில் ஜூஹூ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
மிருனாங்க் சிங், ரிஷப் பந்த் மற்றும் அவரது மேலாளரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பைகள் உள்ளிட்ட பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கித் தருவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பைகள், நகைகள் போன்றவற்றை வாங்கி விற்கும் தொழிலைத் தொடங்கியதாக மிருனாங்க் சிங் கூறியுள்ளார். அதோடு தான் ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்களுக்கு பொருட்களை விற்றதாகவும் கூறி சில குறிப்புகளை காண்பித்துள்ளார்.
இதையடுத்து, தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க எண்ணி, ரிஷப் பந்த் ரூ. 1.63 கோடியை மிருனாங்க் சிங்கிடம் கொடுத்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. மிருனாங்க் சிங் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார் எனத்தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: DC vs MI: பிளே ஆஃப்பில் பெங்களூரு - டெல்லிக்கு டாடா காட்டியது மும்பை