மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி கடந்த மார்ச் மாதம் நான் எழுதிய கடிதத்திற்கு மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் கரத் கடந்த 25ஆம் தேதி பதில் அளித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், உக்ரைனில் நிலைமை சீரடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளையும் பரிசீலிப்போம் - இடைக்கால நடவடிக்கையாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மீது உக்ரைன் மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, உரித்தான மட்டங்களில் கலந்தாலோசனை செய்யுமாறு இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை (I.B.A)அறிவுறுத்தியுள்ளதாக பகவத் கரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கடிதத்தில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்று உளமார விரும்பினாலும், அதை கல்விக் கடன் ரத்து குறித்த பிரச்சினையோடு இணைக்காமல், ஏற்கெனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குகிற முடிவை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய-சீன எல்லையில் வசித்த 'பார்வதி' மீட்பு!