புதுச்சேரி: பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்குப் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, அவருடன் பயணம் செய்தவர்களின் விவரங்களையும், தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் சேகரித்து வந்தனர். இதில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் புதிய வகை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் அருகில் பயணம் செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசுக்கு தெரியப்படுத்தியது. இந்நிலையில், அவர் கண்டுபிடிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரியில் அனுமதி அளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்தக் கொண்டாட்டங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாநிலத்திற்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாகவும், இதனால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரும் 31ஆம் தேதி வரை பிரிட்டன் நாட்டிற்கு விமான சேவைகள் ரத்து!