புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இட ஒதுக்கீடு சம்பந்தமாக, முத்தியால்பேட்டை சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் முந்தைய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்துசெய்து ஐந்து நாள்களுக்குள் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிட மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசாணை ரத்து
நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக 2019 மார்ச் 7 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, புதுச்சேரி அரசிதழில் உடனடியாக வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பு செயலர் கிட்டிபலராம் நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ளார்.
அதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2012 டிசம்பர் 13 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இட ஒதுக்கீடு
அதேபோல் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் வழங்க 2016ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் ஓபிசி 11 விழுக்காடு, முஸ்லிம் 2 விழுக்காடு, எம்பிசி 18 விழுக்காடு, மீனவர் 2 விழுக்காடு, பழங்குடியினர் 1 விழுக்காடு என 34 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பின்பற்றப்பட்டுவருகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பிற்படுத்தப்பட்டோர் 33.5 விழுக்காடாக அட்டவணை இனப் பழங்குடியினர் 0.5 விழுக்காடு எனப் பின்பற்ற புதுச்சேரி அரசு முடிவுசெய்து அரசாணை பிறப்பித்தது.
புதிய இட ஒதுக்கீடு விரைவில்
இந்தியத் தேர்தல் ஆணைய விதிப்படி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மாற்றி அமைக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பெண்கள், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆளுநர் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டு முறை குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை. இந்த உத்தரவுதான் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது. புதிய இட ஒதுக்கீடு அரசாணையை விரைவில் பிறப்பிக்க உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கோயில்களின் பெயர்கள்; சமஸ்கிருதத்துடன் தமிழும் இடம்பெற நடவடிக்கை'