மத்தியப் பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டத்தில் உள்ள சேதுபுரா கிராமத்தில் ஹரிகிஷன் குஸ்வாஹா என்பவரின் 3 வயது மகன் பிரகலாத் நேற்று(நவ-5) விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே காவல் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு குழு, ராணுவம் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் ஆழ்துளைக் கிணறு தொடர்பான வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் கூறுகையில், "குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகிறது. ராணுவம் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்படுவான் என நம்புகிறேன். குழந்தை நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம்" என்று ட்வீட் செய்துள்ளார்.