காத்மண்டு: பொக்ராவில் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பயணிகளுடன் எட்டி விமான நிறுவனத்தின் விமானம், நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்குக் கிளம்பியது.
அந்த விமானத்தில் இருந்த 72 பயணிகளுடன் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 கொரியா நாட்டினர், அயர்லாந்து மற்றும் அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 14 வெளிநாட்டினரும் பயணம் செய்தனர்.
அப்போது விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எட்டி ஏர்லைன்ஸின் 9N-ANC ATR-72 என்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பழைய விமான நிலையத்திற்கும், புதிய விமான நிலையத்திற்கும் இடையே உள்ள சேதி நதிக்கரையில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்தது.
பெரும் சத்தத்துடன் கரும் புகைகள் விண்ணை முட்டும் அளவிற்கு நிகழ்ந்த இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 72 பேரும் பலியானதாகத் தகவல்கள் வெளியானது. விமான விபத்தில் உயிரிழந்த நபர்களில் அபிசேக் குஷ்வாஹா (25), பிஷால் சர்மா (22), அனில் குமார் ராஜ்பார் (27), சோனு ஜெய்ஸ்வால் (35), மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் (26) ஆகிய 5 நபர்கள் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன எனக் கண்டறிய 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் அறிக்கை வெளியிட்டது. தற்போது நேபாள விமான விபத்து நடந்த ஒரு வருடம் ஆகப் போகிறது.
இந்நிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க முன்னாள் செயலாளர் நாகேந்திர பிரசாத் கிமிரேயின் ஒருங்கிணைப்பின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையம், நேற்று (டிச.28) கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சூடான் கிரதியிடம் நேபாள விபத்து தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், நேபாள விமான விபத்துக்கு மனித தவறுகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்க சுமார் 8 மாதம் 3 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்த நாளில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசாங்கம் அமைத்தது. அந்த குழுவில், நேபாள ராணுவத்தின் ஓய்வு பெற்ற கேப்டன் தீபக் பிரகாஷ் பஸ்டோலோ, ஓய்வு பெற்ற கேப்டன் சுனில் தாபா, ஏரோநாட்டிகல் இன்ஜினியர் எக்ராஜ் ஜங் தாபா, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச்செயலர் புத்தி சாகர் லாமிச்சானே உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
மேலும், இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு துணை அமைப்புகளுக்கு அமைச்சர் கிரதி உத்தரவிட்டார். தற்போது பொக்காராவில் நடந்த இந்த எட்டி ஏர்லைன்ஸ் விமான விபத்தானது 104வது விமான விபத்து ஆகும். ஆனால் உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால் மற்ற விபத்துகளைக் காட்டிலும் இது 3வது பெரிய விபத்து எனக் கூறப்படுகிறது.