ஆப்கானிஸ்தான்: சஞ்சாரக் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் சுமார் 80 சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சர்-இ-புல் மாகாண கல்வித் துறையின் தலைவர் முகமது ரஹ்மானி தெரிவித்தார்.
இதுகுறித்து முகமது ரஹ்மானி கூறியதாவது, "வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சர்-இ-புல் மகாணத்தில், நஸ்வான் - இ - கபோத் ஆப் பள்ளி மற்றும் நஸ்வான் - இ - ஃபைசாபாத் பள்ளி ஆகிய 2 தொடக்கப் பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளது. இந்த பள்ளிகளில் ஜூன் 3 மற்றும் 4-ஆம் தேதி மாணவிகள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளது.
நஸ்வான் - இ - கபோத் ஆப் பள்ளியில் சுமார் 60 குழந்தைகளும், நஸ்வான் - இ - ஃபைசாபாத் பள்ளியில் 20 குழந்தைகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட 80 சிறுமிகளுக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, அடுத்தடுத்து மயக்கமடைந்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் அனைவரும் விஷம் கலந்த உணவு சாப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட அனைவரையும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக உள்ளனர்" எனக் கூறினார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஏதோ மர்மநபர் ஒருவர் பழிவாங்கும் எண்ணத்தில் இந்த தாக்குதலை நடத்துவதற்காக மூன்றாம் தரப்பினருக்கு பணம் கொடுத்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், எதற்காக சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது, எப்படி கொடுக்கப்பட்டது? அவர்களின் தற்போதைய நிலைமை என்ன?, பாதிக்கப்பட்டவர்களின் வயது, பெயர் உள்ளிட்ட என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் அவர்கள் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுமிகள் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 2021-இல் தலிபான்கள் அரசு அதிகாரத்திற்கு வந்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்தே கிட்டத்தட்ட 2 வருட காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதாவது பெண்கள், சிறுமிகள் பூங்கா மற்றும் கேளிக்கை பொன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை. ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான அடக்குமுறையைத் தொடங்கிய பின்னர், இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
சிறுமிகள் மீது நடத்தப்பட்ட விஷ தாக்குதல் போலவே அண்டை நாடான ஈரானில் சென்ற நவம்பரில் அந்நாட்டின் பள்ளி வயது சிறுமிகளை குறிவைத்து நடத்தப்பட்ட நச்சுத்தன்மையின் அலையை இந்த தாக்குதல் சம்பவம் நினைவூட்டுகிறது. அந்த சம்பவத்தில், துர்நாற்றம் வீசும் நச்சுத்தண்மை வாய்ந்த விஷம் பள்ளி வளாகங்களில் வீசப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நோய்வாய்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்து: பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது!