சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்கான வாக்குகள் நாளை (ஜூலை 21) எண்ணப்படுகிற நிலையில் நாளையே நாட்டின் அடுத்த 15 ஆவது முதல் 'குடிமகன்' யார் என்பது தெரிந்து விடும். இதுவரை இந்திய நாட்டில் 14 குடியரசுத் தலைவர்கள் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர்களின் செயல்பாடுகள் முத்திரை பதிக்கும்படி இருந்தது. மேலும் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை, அந்தந்தத் துறைகளில் திறமைசாலிகளாகவும், அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்த சில குறிப்பிடத்தக்க குடியரசுத் தலைவர்களை இந்தியா கண்டிருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 14 குடியரசுத் தலைவர்கள் பணியாற்றிய நிலையில், குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அல்லது கல்வியாளர் டாக்டர் ஜாகிர் உசேன் அல்லது மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், சிறந்த பத்திரிக்கையாளரான கே.ஆர். நாராயணன் உள்ளிட்ட சில தலைவர்கள் இந்தியாவின் தலைசிறந்த குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பேர் - ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த சிறப்பு தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
ராஜேந்திர பிரசாத் (1950- 1962)
முதல் குடியரசுத் தலைவராக 1950 முதல் 1962 ஆம் ஆண்டு வரை தனக்கென ஒரு மனதுடன் வலிமையான தலைவராக நின்றார். எனினும் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என பேசப்பட்டது. ஆனால், அவரது அலுவலக வரம்புகளுக்குள் இருந்தார்.
மேலும் 1962 இல் நடந்த இந்தியா - சீனப் போரின் தோல்விக்குப் பிறகு பிரதமர் நேருவை அணுகி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனனைப் பதவியிலிருந்து நீக்க பரிந்துரை செய்து மேனனை நேரு நீக்கினார்.
ராதாகிருஷ்ணன் (1962- 1967)
டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராவதற்கு முன், துணைத் தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
”டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பது தத்துவத்திற்கு கிடைத்த பெருமை. ஒரு தத்துவஞானியாக நான் இதில் தனி மகிழ்ச்சி அடைகிறேன். தத்துவவாதிகள் அரசராக வேண்டும் என்று பிளாட்டோ (கிரேக்க தத்துவஞானி) ஆசைப்பட்டார். மேலும் ஒரு தத்துவஞானியை குடியரசுத் தலைவராக்குவது இந்தியாவுக்கு செய்யும் மரியாதை”
என்று பிரபல தத்துவஞானி பெர்ட்ராண்ட் ரசல் (Bertrand Russell) கூறினார். குடியரசுத் தலைவராக, அவர் மரண தண்டனையை கண்டித்து, அவர் பெற்ற 57 கருணை மனுக்களையும் ஏற்றுக்கொண்டார். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஜாகிர் உசேன் (1967- 1969)
இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் ஒரு கல்வியாளர். அவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். பதவியில் இருந்தபோது இறந்த முதல் குடியரசுத் தலைவர் அவர்தான். 1963இல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஆர். வெங்கடராமன் (1987-1992)
1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அரசை, ஆளுநரிடம் இருந்து அறிக்கை பெறாமலேயே, சந்திரசேகர் அரசின் ஆலோசனையின் பேரில், இலங்கையை தளமாக கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி டிஸ்மிஸ் செய்தார் தமிழ்நாட்டை சேர்ந்த குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன்.
கே.ஆர்.நாராயணன் (1997-2002)
இந்தியாவின் முதல் தலித் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் அரசியல் கட்சித் தலைவரின் எண்ணிக்கையில், குடியரசுத் தலைவர் தனிப்பட்ட முறையில் திருப்தி அடைய சில அடிப்படை விதிகளை வகுத்தார்.
எந்த கட்சிக்கும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமரை நியமிப்பது தொடர்பாக நாராயணன் ஒரு புதிய முன்னுதாரணத்தை அமைத்தார்.
மக்களவையின் நம்பிக்கையை பெறுவதற்கான திறனை குடியரசுத் தலைவருக்கு (தோழமைக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் மூலம்) உணர்த்த முடிந்தால் மட்டுமே ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயணன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஹரோல்ட் லாஸ்கியின் கீழ், அரசியல் அறிவியலைப் பயின்றார் மற்றும் 1949 இல் இந்திய வெளியுறவு சேவையில் (IFS) சேர்ந்தார். அவர் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு வேலை செய்யும் குடியரசுத் தலைவராக அறியப்பட்டார்.
நேருவால் நாட்டின் சிறந்த இராஜதந்திரி என்று போற்றப்பட்ட நாராயணன், இந்திரா காந்தியின் வேண்டுகோளின் பேரில் அரசியலில் சேர்ந்தார். மேலும் 1984, 1989 மற்றும் 1991 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து காங்கிரஸ் சீட்டில் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி அரசியல் அமைச்சராக இருந்தார்.
ஆகஸ்ட் 1992 இல், நாராயணன் நாட்டின் துணை குடியரசுத் தலைவரானார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 1997இல் நடந்த தேர்தலில் 95 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
ஏபிஜே அப்துல் கலாம் (2002-2007)
தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் கலாமை 'மக்கள் குடியரசுத் தலைவர்', கண்ணியம் மற்றும் மரியாதைக்குரிய மனிதர் என்று இன்னும் அழைக்கிறார்கள். இந்தியாவின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தில் பலு சேர்த்த ஒரு விஞ்ஞானி. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் இந்தியாவிற்கு ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது.
இந்தியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டத்தில் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக 1998 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2,500 புத்தகங்கள், ஒரு கைக்கடிகாரம், ஆறு சட்டைகள், நான்கு கால்சட்டைகள், மூன்று சூட்கள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள், இவை தான் அவருடையது.
தனக்காக எதையும் விரும்பாமல் இந்தியாவுக்குச் சேவை செய்தவரின் மொத்த சொத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜி (2012 -2017 )
பிரணாப் முகர்ஜி, பரந்த அனுபவமுள்ள அரசியல்வாதி என்றே கூறலாம். பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனுக்கு இரண்டு பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடியைக் கையாள்வதில் ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டு வந்தார். பல விஷயங்களில் மோடி தனது வழிகாட்டுதலை நாடியதால், முகர்ஜி தனது ஞானத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயங்கவில்லை என பேசப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறித்து அவருக்கு சந்தேகம் இருந்தபோதிலும், மோடியின் இந்த நடவடிக்கையில் அவர் பலன்களைக் கண்டார். இருப்பினும், குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை கேள்விகளுடன் திருப்பி அனுப்ப அவர் தயங்கவில்லை.
எனினும் முகர்ஜி ஜூன் 2018 இல் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் (RSS) நிகழ்விற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர். இந்த நடவடிக்கை அவருக்கு நிறைய விமர்சனங்களை கொடுத்தது.
இதனிடையே பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நாளை டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாநிலங்களில் சட்டசபை வளாகங்கள் என 31 இடங்களில் வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்