டெல்லி: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறுகையில், "உச்சநீதிமன்ற உத்தரவின் படி, விபத்துக்குள்ளான ரயில்களில் டிக்கெட் இல்லாமல் இருக்கும் பயணிகளும் நிவாரணம் பெற முடியும்" என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா, "ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொண்டால், அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பார்கள்.
ரயில் விபத்தில் பலியானோர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் எங்களை தொடர்பு கொள்ளலாம். விபத்தில் சிக்கியவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்க எங்களுக்கும் உதவியாக இருக்கும். அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்" என கூறினார்.
ரயில் விபத்தில் சிக்கிய பலியான 11 பேரின் குடும்பங்கள், படுகாயம் அடைந்த 50 பேர், லேசான காயம் அடைந்த 224 பேர் என மொத்தம் 285 பேருக்கு, இதுவரை ரூ.3.22 கோடி மதிப்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோரோ, காரக்பூர், பாலசோர், கன்டபாரா, பத்ராக், கட்டாக், புவனேஸ்வர் ஆகிய 7 இடங்களில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் தென்கிழக்கு ரயில்வே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 என கூறப்பட்ட நிலையில், தற்போது 275 என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் பிழை ஏற்பட்டதாக ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியுள்ளார். மொத்தம் உயிரிழந்த 275 பேரில், 88 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 78 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் கூறினார். மேலும் 10 சடலங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 170 சடலங்கள் புவனேஸ்வர் மற்றும் பிற அரசு மருத்துவமனைகளின் சவக்கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Odisha Train Accident : "பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பிற்கு நாங்கள் பொறுப்பு" - கவுதம் அதானி!