பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்காலிகப் பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் கூறுகையில், " நீடா அம்பானிக்கு பதில், பெண் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை நியமித்திருக்க வேண்டும்" என்றார். நீடாவை தற்காலிகப் பேராசிரியராக நியமிக்கும் திட்டத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியுள்ளோம் என பெண்கள் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஷுபம் திவாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தொழில்முனைவோரான நீடா அம்பானி, எங்கள் மையத்தில் சேர்ந்தால் பூர்வஞ்சல் பெண்கள் அவரின் அனுபவத்தால் பயன்பெறுவார்கள்" என்றார்.
இந்நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்காலிகப் பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுப்புத் தெரிவித்துள்ளது.