அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 20 வயதுடைய கர்ப்பிணி இஸ்லாமியப்பெண்மணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) விடுதலையாகினர். குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் விடுதலை குறித்து, பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்மணி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது குடும்பத்தையும் என் வாழ்க்கையையும் சீரழித்த, என் மூன்று வயது மகளை என்னிடமிருந்து பறித்த 11 குற்றவாளிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15அன்று விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி கேட்டபோது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதே அதிர்ச்சி மீண்டும் என்னை தாக்கியது.
குஜராத் அரசின் இந்த நடவடிக்கை என்னை நிலைகுலையச்செய்துவிட்டது. ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி முடிந்துவிடுமா? இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை.
நீதிமன்றங்களையும், நீதி அமைப்பையும் நான் நம்பினேன். அதனால் அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியுடன் வாழக் கற்றுக் கொண்டேன். தற்போது இந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதால், எனது அமைதி பறிக்கப்பட்டுவிட்டது. நீதியின் மீதான எனது நம்பிக்கை குலைந்துவிட்டது.
என்னிடமிருந்த சோகங்களும், எனது நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல, நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து இந்த விடுதலை உத்தரவை திரும்பப் பெறுங்கள். அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான எனது உரிமையை திருப்பித்தாருங்கள். எனது குடும்பத்தினரும் நானும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது மன ரீதியான கொடுமை... கேரள உயர்நீதிமன்றம்