ஜெய்ப்பூர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில், இச்சட்டங்களை மாற்றி அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அசோக் கெலாட் எழுதியுள்ள கடிதத்தில், “2020-21 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக சுருங்கிய நிலையிலும், விவசாயத் துறையின் வளர்ச்சி 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் நலனுக்காகவும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகவும் பிரதமர் வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நமது நாடு நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினத்தை கொண்டாடியது.
அப்போது நமது விவசாயிகள் லாத்திகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தாக்கப்பட்டனர். ஆகவே, விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கேட்டு தீர்க்க வேண்டும். விவசாயிகள் தங்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் இந்த நாட்டின் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சுகின்றனர்.
வேளாண் சட்டங்கள், காங்கிரஸ் தலைவர், விவசாயிகள், எந்தவொரு நிபுணர்களின் கலந்துரையாடல் இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மசோதாக்களை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பக்கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) குறிப்பிடப்படவில்லை, இது விவசாயிகள் மத்தியில் அவநம்பிக்கைக்கு வழிவகுத்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
முன்னதாக மத்திய அரசின் பேச்சுவார்த்தையையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இந்தச் சட்டங்கள் அமலுக்கு வரும்பட்சத்தில் விவசாயிகள் தனியாரை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில், 100 பேர் கூடி திருமணம் நடத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்!