மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து இருப்பது மராட்டிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் அஜித் பவார் இணைந்தார். தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வகித்து வரும் நிதி அமைச்சர் பதவியை அஜித் பவாருக்கு வழங்க ஏக்நாத் ஷிண்டே அணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற துணை முதலமைச்சர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், அதற்குள் அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான 8 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர். தெற்கு மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது இல்லை என்றும்; யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் சரத் பவார் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றதாகவும் அஜித் பவார் அணியைச் சேர்ந்த பிரபுல் பட்டேல் தெரிவித்தார். மேலும் 8 அமைச்சர்களும் சரத் பவாரிடம் ஆசிர்வாதம் பெறச்சென்றதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்ததாகவும் பிரபுல் பட்டேல் கூறினார்.
அமைச்சர்கள் கூறியதை சரத் பவார் கவனமுடன் கேட்டுக்கொண்டு இருந்ததாகவும் பதில் எதுவும் கூறவில்லை என்றும் பிரபுல் பட்டேல் தெரிவித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களிடம் பேசிய சரத் பவார், வளர்ச்சிக்கான அரசியலை தொடர்வேன் என்றும்; ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்தில், சரத் பவாரை, துணை முதலமைச்சர் அஜித் பவார் மீண்டும் சந்தித்து உள்ளார். ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அணியில் அஜித் பவார் தரப்புக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்பு - ஜே.பி. நட்டா!