திருவனந்தபுரம்: கேரளத்தின் பாலா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மாணி சி காப்பன். இவர், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் இணைந்தார்.
அவரை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வரவேற்றார். இந்நிலையில், மாணி சி காப்பன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சிக்கு பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இதற்கு 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக மாணி சி காப்பன் உள்ளார். 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு இன்னும் சில நாள்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அங்கு ஆளுங்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் 12 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் 7 கட்சிகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் திடீர் கெடுபிடி; மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு?