புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் கூட்டம் புதுவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. அதில முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "காஷ்மீரில் அனைத்து தலைவர்களையும் சிறை வைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதுதான் ஜனநாயகமா?. புதுச்சேரி அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என பிரதமர் கூறுவதை நிறுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமாவதற்கு கிரண்பேடி தான் காரணம்" என்றார்.