ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் வலது சாரி அமைப்பான ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடியின் வீடு ஷியாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இந்நிலையில், கோகமெடி வீட்டிற்குள் நுழைந்த 4 மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கோகமெடி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு அருகில் உள்ள மெட்ரோ மாஸ் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கோகமெடியின் பாதுகாவலர்களும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என தெரியவராத நிலையில், கோகமெடி உயிரிழந்த தகவல் கேள்விப்பட்டு கொதித்தெழுந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீசார் விடை தேடி விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதையும் படிங்க : "டிச.6 இந்தியா கூட்டணியின் கூட்டம் முறைப்படியான கூட்டம் அல்ல" - காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!