திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இளைஞர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டது. பின்னர் அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், சிறுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோரையும் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சிறுமியின் வீட்டார் ஒப்புதலுடன் 16 வயதான சிறுமிக்கும், 23 வயது இளைஞருக்கும் மசூதியில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.
சிறுமி படித்த பள்ளியின் ஆசிரியர்கள் இதுகுறித்து விசாரித்தபோதுதான் திருமணம் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து குழந்தை திருமணம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியை திருமணம் செய்த இளைஞர், சிறுமியின் தந்தை, திருமணம் செய்து வைத்த மதபோதகர் ஆகிய மூவரையும் போலீசார் நேற்று(ஜன.23) கைது செய்தனர்.