இந்தியாவில் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பெருவாரியாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் மக்கள் தங்கள் உடன் பிறந்த, உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கட்டி மகிழ்வர். இந்நிலையில், இந்த ஆண்டு கொல்கத்தா சந்தைகளில் பல தனித்துவமான, அரசியல் தலைவர்கள் படங்களைக் கொண்ட ராக்கிக்கள் விற்பனையில் களைகட்டி வருகின்றன.
கொல்கத்தா சந்தைகளில் களைகட்டும் மோடி - மம்தா ராக்கிகள்
அதன்படி, ஒரு புறம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகைப்படம் பதிந்த ராக்கிக்களையும், மற்றொருபுறம் பிரதமர் மோடி புகைப்படம் பதிந்த ராக்கிக்களையும் மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ’திதி ஓ திதி’ எனக் கேலியாகப் பேசி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பரப்புரை களம் சூடு பிடித்தது. இந்நிலையில், தற்போது இருவரது புகைப்படங்களும் பொருந்திய ராக்கிகள் விற்பனையில் சூடுபிடித்துள்ளன.
கட்சி சின்னங்களால் ஆன ராக்கிகள்
அதேபோல் திருணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜகவின் தாமரை சின்னங்களுடன் கூடிய ராக்கிகளும் விற்பனையில் களைகட்டி வருகின்றன.
மேலும், இந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூவர்ணத்தைத் தாங்கிய ராக்கிக்களும் சந்தைகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தலைவர்கள் வாழ்த்து
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரக்ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடும் காரணமும்