டெல்லி : திவால் மற்றும் வங்கி திவால் குறியீடு (திருத்த) மசோதா, 2021 மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்போது, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த மசோதா திவால் தீர்மானத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) செலவை குறைத்து செயல்முறையை விரைவுபடுத்தும்” என்றார்.
இந்த செயல்முறை 120 நாள்களில் முடிவடையும் என்பதால் எம்எஸ்எம்இ (MSME)களுக்கு நிவாரணம் கிடைக்கும்” என்றார்.
இந்த மசோதா ஜூலை 28, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா திவால் மற்றும் திவால் குறியீடு, 2016-ஐ திருத்துகிறது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் சலசலப்பை உருவாக்கியன. சில எம்.பி.க்கள் கைகளில் இருந்த தாள்களை கிழித்து வீசினார்கள்.
அப்போது அவர்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பெகாசஸ்: இரு அவைகளும் தொடர் ஒத்திவைப்பு