ஷாஜஹான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை செய்துவருகிறார்.
அந்தவகையில் நேற்று (பிப்ரவரி 7) ஷாஜஹான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவைச் சீண்ட வேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் தப்ப முடியாது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை இந்தியா அழித்தது.
தேவைப்பட்டால் எல்லையின் இருமருங்கிலும் வைத்து பயங்கரவாதிகளை வீழ்த்துவோம்" என எச்சரித்தார். இந்திய ராணுவத்தின் வீரம் குறித்த ராகுல் காந்தியின் கேள்வி குறித்து குற்றஞ்சாட்டிய ராஜ்நாத் சிங், ராகுலுக்கு ஆண்டவன் ஞானம் வழங்கட்டும் என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை வெறுப்பு அரசியலை மேற்கொண்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் நம்பிக்கையை உடைக்க பாஜக அனுமதிக்காது என்று சொன்ன ராஜ்நாத், எங்களது கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்காது என்றார். நாட்டின் பாரம்பரியத்தைக் காப்போம், நாட்டையும் மேம்படுத்துவோம் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: எல்லையில் பாதகமான சூழலை எதிர்கொள்ள தயார் - ராஜ்நாத் சிங்