உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜஸ்வந்த் ராணுவ மைதானத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெறவுள்ள 7ஆவது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினப் பேரணியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதன்பின் இந்திய ராணுவம் மற்றும் கிளாவ் குளோபல் ஆகியவற்றின் 'Soul of Steel Alpine Challenge' என்ற கூட்டு சாகச நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்திய ஆயுதப்படை முன்னாள் வீரர்களின் மிக உயர்ந்த தியாகத்தையும் தன்னிகரற்ற சேவையையும் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்னாள் ராணுவ தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் கே எம் கரீயப்பா, 1953ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நமது ஆயுதப்படை வீரர்களைப் பாராட்டும் விதமாக முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு முதலில் டேராடூனில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், மேற்கு வங்க மாநிலம் பனகர், டெல்லி, தமிழ்நாட்டின் சென்னை, ஹரியானாவின் சண்டிகர், ஒடிசாவின் புவனேஷ்வர் , மகாராஷ்டிராவின் மும்பை ஆகிய ஒன்பது இடங்களிலும் விழா நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பீகாரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாத சதித்திட்டம் எனத் தகவல்