அம்ரோகா: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமெடுத்துள்ளன. அதன்படி, உ.பி.யில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன.
குற்றச்சாட்டுகளும், பதிலடிகளும், கனவுகளும், பதில்களும் என உத்தரப் பிரதேச தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஆட்சியைத் தக்கவைக்க யோகி ஆதித்யநாத் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், கட்சியின் பிரதான தலைவர்கள் எனச் சுழன்று சுழன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
உழவர்களுக்காக 2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு
அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகான் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவேந்திர நக்பால் என்பவரை ஆதரித்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "நாங்கள் முதலில் யாரையும் தாக்க மாட்டோம், ஆனால் யாரேனும் எங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் எல்லையின் இருமருங்கிலும் வைத்து பழிதீர்ப்போம்.
மோசமான வானிலையை எதிர்கொண்டுதான் நான் இங்கு வந்துள்ளேன். கடந்த அரசைப் போல் அல்லாமல் உழவர்களிடமிருந்து நெல், கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளோம். இதற்காக மத்திய பட்ஜெட்டில் 2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊழல் கறைபடிந்தவை. ஆனால் எங்கள் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்கள். பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பினால் 15 காசுகள்தாம் அவர்களைச் சென்றடைவதாக ராஜிவ் (முன்னாள் பிரதமர்) ஒருமுறை நேரடியாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கு தலைகீழாக நிற்கும் ஆசனம்
ஆனால், தற்போது ஊழலைக் கட்டுப்படுத்தும் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசுத் திட்டங்களின் பலன்கள் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகின்றன. பாஜக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு வலுப்பெற்றதால் குண்டர்களும், ரவுடிகளும் காவல் நிலையம் சென்று சிறையில் இருக்க சரணடைகின்றனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கிண்டலாக, 84 ஆசனங்களில் தலைகீழாக நிற்கும் ஆசனத்தை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு விட்டுவிட்டோம் என்றார்.
அகிலேஷை குறிவைத்துப் பேசிய ராஜ்நாத், 'அகிலேஷ் மூழ்குவதற்காக ஒரு சிவப்புப் பொதியுடன் சுற்றிவருகிறார். மேலும் அவர் வாக்காளர்களைக் கவருவதற்காக பிரதமரின் சம்மான் நிதி யோஜனா பெயரைப் பயன்படுத்துகிறார்' என்று கூறினார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு 'தமிழன்'ஆக அண்ணாமலையின் பதில் இதுதான்!