புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையில் “பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகளின் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா எனவும், கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் எனவும், இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
பின்னர் தமிழக அரசு சார்பில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக வாதம் முன் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'பேரறிவாளனை விடுவிப்போம்'- உச்ச நீதிமன்றம் அதிரடி!