ராஞ்சி: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் வெளியான சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். வழக்கமாக தனது படம் வெளியாகும் சமயத்தில் இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த் கடந்த 4 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இமயமலைக்கு செல்லவில்லை. அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வந்தார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். பின்னர் பிரபல வழிபாட்டு தளமான சின்னமஸ்தா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இதனையடுத்து பிர்சா முண்டா விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சின்னமஸ்தா கோயிலுக்கு சென்றது நன்றாக இருந்தது. நான் இந்த கோயிலுக்கு பல நாட்களாக வர வேண்டும் என நினைத்து இருந்தேன். இப்போது தான் வர வாய்ப்பு கிடைத்தது.
நான் ஜார்க்கண்டிற்கு மூன்றாவது முறை வந்துள்ளேன். ஒவ்வொரு வருடமும் வருவேன்” மேலும் சமீபத்தில் இமயமலைக்கு சென்ற போது பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் இன்று ரஜினிகாந்த் உத்திர பிரதேச தலைநகர் லக்னோ செல்லவுள்ளதாகவும் அங்கு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து உரையாடி இருவரும் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்கவுள்ளதாகவும் தகவல் வெளியகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் ரோபோக்கள் கட்டிய 3D தொழில்நுட்பத்திலான தபால் நிலையம்! அப்படி என்ன ஸ்பெஷல்