ஹைதராபாத்: ஜெயிலர் திரைப்பட வெளியீட்டையொட்டி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவரைக் காண வந்த ரசிகர்கள் உடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன், அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்ட ரஜினிகாந்த், அங்கு சிறப்புரை ஆற்றினார் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ள ஜெயிலர் படம், உலகம் முழுவதும் சுமார் 7,000 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் இந்த நிலையில், இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் முகாமிட்டு பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் சென்று ஆன்மீக தரிசனம் மேற்கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்து திரும்பிய அவர் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்ற அவர், அங்குள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்துக்குச் சென்று துறவிகளைச் சந்தித்தார். ஆசிரமத்திற்கு வேண்டிய நன்கொடைகளையும் ரஜினிகாந்த் வழங்கினார்.
இந்நிலையில் வெள்ளிகிழமையான நேற்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) லக்னோ சென்றடைந்த ரஜினி தனது வருகை குறித்து பேசிய போது கடவுளின் ஆசீர்வாதத்தால் படம் வெற்றியடைந்து உள்ளது. ஜெயிலர் படத்தை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பார்க்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் லக்னோவில் இருந்து சென்னை திரும்பிய பிறகு ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து முடித்த மற்றொரு திரைப்படமான லால் சலாம், ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "பெரிய நடிகர்கள் படம் மட்டுமே வெற்றி பெறும் என்பதை மாற்றுவோம்" - கவிஞர் வைரமுத்து!