ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் வாரந்தோறும் சனிக்கிழமை, 'நோ பேக் டே' என்ற புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கும் வகையிலும், விளையாட ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையில், மாணவர்கள் செஸ் விளையாட ஊக்குவிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.டி.கல்லா அறிவித்தார். பிகனேரில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை அறிவித்தார். அப்போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சதுரங்க விளையாட்டையும் விளையாடினார்.
அப்போது பேசிய அவர், "நவம்பர் 19ஆம் தேதி முதல் ராஜஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் ஒரே நேரத்தில் தொடங்கப்படும். இது ஒரு வரலாற்று நடவடிக்கை. இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும். ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 30 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகள் நகர்ப்புறங்களிலும் நடத்தப்படும்.
பள்ளியில் செஸ் விளையாட ஊக்குவிப்பதால், குழந்தைகளின் நினைவாற்றல், ஒழுக்கம், சுய சிந்தனை ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் போன்களின் எதிர்மறையான தாக்கங்களுக்கு மத்தியில், எதிர்கால சந்ததியினரின் சிந்தனையை ஆக்கப்பூர்வமானதாக மாற்ற இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும். இந்த விளையாட்டுகள் பள்ளியில் இருந்து சாம்பியன்களை உருவாக்கும், உலக அளவில் ராஜஸ்தானுக்கு விருதுகளை கொண்டு வரும்" என்று கூறினார்.
பிகனேர் கோட்ட ஆணையர் நீரஜ் கே.ஏ.பவன் கூறுகையில், "செஸ் விளையாட்டு வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும். இந்த விளையாட்டை சுமார் ஒரு கோடி குடும்பங்கள் அணுகுவது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்" என்றார்.
இதையும் படிங்க:உத்தரப்பிரதேசத்தில் "பழங்குடியின சுற்றுலா" அறிமுகம்