ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தின் கக்ரானா பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் துர்கா சிங் என்பவர் கடத்தப்பட்ட வழக்கில் அம்மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ராஜேந்திர குதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் துர்கா சிங் நேற்று (பிப். 2) நீம் கா தானா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஊராட்சித் துறை அமைச்சர் ராஜேந்திர குதா, அவரது உதவியாளர் கிருஷ்ண குமார், விம்லா கன்வார் ஆகியோர் நிலம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் காரணமாக ஜனவரி 27ஆம் தேதி என்னை காரில் கடத்தினர்.
அதுமட்டுமல்லாமல், எனது வங்கிக் காசோலையில் மிரட்டி கையொப்பம் பெற்றனர். ஆகவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சர் ராஜேந்திர குதா உள்பட கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அமைச்சருடன் தொடர்புடையது என்பதால், சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜேந்திர குதா.
அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அசோக் கெலாட் அமைச்சரவையில் ஊராட்சித் துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார். அண்மையில் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு