ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டத்தை நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் அவர்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று (டிச. 30) விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தார். அதில், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரப்புரை வேளாண்மையைக் காப்பாற்றுங்கள் - நாட்டைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் ஜனவரி 3ஆம் தேதிமுதல் நடைபெறும். இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே நாளில் விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும், அமைச்சர்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் இடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான மின்சாரத் திட்டம், பட்ஜெட் தயாரித்தல், இடைத்தேர்தல்கள், 2021ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி - மத்திய வேளாண்துறை அமைச்சர்