ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று (நவ.25) நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், தற்காலிகமாக அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இருப்பினும், வாக்காளர்கள் 6 மணிக்குப் பிறகும் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றதால், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மொத்தமாக 74.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 74.06 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 51 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள், வருகிற டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
மொத்தம் 5 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 146 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். இந்தத் தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 862 வேட்பாளர்கள் களம் கண்டனர். பாதுகாப்புக்காக 1.70 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புத் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வாக்குப்பதிவின்போது, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வாத், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோர் தங்களது வாக்குச்சாவடிகளில், வாக்குகளை பதிவு செய்தனர்.
முக்கியமாக சரத்புரா, டோங்க், ஜாஹலர்படான், ஜுன்ஜுனு, ஜோத்வாரா மற்றும் சுரு ஆகிய தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக கவனிக்கப்பட்டது. அதிலும், 1998ஆம் ஆண்டு முதல் அசோக் கெலாட் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சரத்புரா தொகுதி அரசியல் விமர்சகர்களால் உற்று நோக்கப்பட்டது. அதேநேரம், இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மகேந்திர சிங் ரத்தோர் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்! இறங்கியதும் போட்ட முதல் ட்வீட் என்ன தெரியுமா?