ஜெய்ப்பூர்: 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு இன்று (நவ.25) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதியில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதர 199 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, காலை 9 மணி நிலவரப்படி 9.77 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதனையடுத்து, காலை 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீத வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.27 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதனையொட்டி, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 51 ஆயிரத்து 890 வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில், மொத்தம் 5 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 146 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்குள் 1 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 334 இளம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், 18 முதல் 19 வயதுக்குள்ளான 22 லட்சத்து 61 ஆயிரத்து 8 என்ற எண்ணிக்கையிலான முதல் முறை வாக்காளர்களும் வாக்களிக்கின்றனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், தங்களது வாக்குகளை தபால் ஓட்டாகச் செலுத்த உள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதனை ஒட்டி, 69 ஆயிரத்து 114 ராஜஸ்தான் மாநில காவல் துறையினர், 32 ஆயிரத்து 876 ராஜஸ்தான் உள்ளக காவலர்கள், 700 மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 290 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ராஜஸ்தான் தேர்தல் களம்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, பிஎஸ்பி மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது, பாஜக 73 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லாப், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், விஷ்வராஜ் சிங் மேவர், ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சிபி ஜோஷி மற்றும் ராஜேந்திர ரத்தோர் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஆளும் காங்கிரஸ் மற்றும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ள பாஜக ஆகிய இரு தரப்பிலும் தேசியத் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!