ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா தளர்வு ஊரடங்கு விதியை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி திருமணம் நடத்தினால், அரசு விதிக்கும் அபராதம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாக அலுவலர்கள், காவல் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பொதுமக்கள் தடையை மீறி அதிகமாக கூடுகின்றனர் என்று காவலர்கள் கவலை தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அசோக் கெலாட், “மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மூத்த அலுவலர்கள் எட்டு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மக்களும் முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் ரூ.200இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. திருமண விழாவில் 100 பேருக்கு மேல் கூடினால் அபராதம் ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படும்” என்றார். இதற்கு முன்னர் இந்த விதியை மீறினால் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டுவந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், கோட்டா, அல்வார், உதய்பூர், அஜ்மீர், உள்ளிட்ட மாவட்டங்களில் அமலில் உள்ளது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) 3,260 புதிய கோவிட்-19 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். இதில் ஜெய்ப்பூரில் 603 பாதிப்பாளர்களும், ஜோத்பூரில் 414 பாதிப்பாளர்களும், அஜ்மீர், அல்வார், பில்வாரா, கோட்டா, பாலி மற்றும் உதய்பூர் பகுதிகளில் 210, 271, 131, 240, 100, 184 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில் கோவிட்-19 பாதுகாப்பு விதிகள் மக்களின் பாதுகாப்பு கருதி அமலில் உள்ளன என மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறினார்.
இதையும் படிங்க: 'தேசத்தை பிளவுபடுத்த 'லவ் ஜிஹாத்' என்ற சொல்லை உருவாக்கியது பாஜக!'