காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த இரண்டு நாள்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக, கேரளா மீனவர்களுடன் தங்கசேரி கடற்கரைக்கு படகில் சென்று மீன் பிடித்தார்.
அதிகாலை 4.30 மணியளவில் அங்குள்ள வாடி கடற்கரையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடலில் மீனவர்களுடன் சென்றார். அவருடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், தேசிய மீனவர் காங்கிரஸின் தலைவர் டி என் பிரதாபன் எம்பி ஆகியோரும் சென்றனர்.
பின்னர் மீனவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, “நான் எப்போதும் மீனவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன். இன்று (பிப். 24) அதிகாலையில், நான் என் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றேன். படகு சென்று திரும்பி வந்த தருணத்திலிருந்து, அவர்கள் முழு ஆபத்தையும், அவர்களின் முழு உழைப்பையும் பார்த்தேன்.
அவர்கள் கடலை நம்பி வலையை வாங்கினார்கள். ஆனால் இங்கு வேறு யாரோ லாபம் பெறுகிறார்கள். நாங்கள் மீன் பிடிக்க முயற்சித்தோம். ஆனால் ஒரு மீன் மட்டும்தான் சிக்கியது. இது எனக்கு ஒரு நல்ல அனுபவம்” என்றார்.
இதையும் படிங்க...நெல்லை தொகுதி பாஜகவுக்கா? - அதிர்ச்சியில் அதிமுகவினர்!