டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.
“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கு ராகுல் காந்தி தரப்பில், கருத்து மற்றும் பேச்சுரிமையால் பேசப்பட்டது என வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி "சங்கல்ப் சத்தியாகிரக" போராட்டத்தை அறிவித்தது.
நேற்று (மார்ச் 26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் காந்தி நினைவிடம் உள்ள ராஜ் காட் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ப சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள், கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: அரசு விழாவில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளி - பாஜக எம்பி, எம்எல்ஏ இருக்கும் புகைப்படம் வைரல்!