டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கட்கிழமை அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ராகுல் காந்தி மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாட திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்" என ராகுல் காந்தி பேசினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்தது. மேலும் ராகுல் காந்தியின் மக்கள் பிரதிநிதி பதவி காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு இல்லம், தூதரக ரீதியிலான அந்தஸ்து கொண்ட பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன.
இந்நிலையில், புதிதாக பாஸ்போர்ட் வாங்க தடையிலான சான்று கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். 10 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணையை பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி வைபவ் மேதா விசாரித்தார்.
ராகுல் காந்தி மீது எந்தவிதமான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் புதிய பாஸ்போர்டுக்கு தேவையான தடையில்லா சான்று வழங்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்க அவருக்கு தடையில்லா சான்று வழங்குவது முறையல்ல என சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வைபவ் மேதா, சுப்ரமணிய சுவாமியின் மனுவை நிராகரித்தார்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தடையில்லா சான்றிதழ் கோரியிருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராகுல் காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தி திங்கட்கிழமை (மே. 29) அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூ யார்க், வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களுக்கு ராகுல் காந்தி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 நாள் பயணத்தின் போது சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயணத்தின் போது அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட உள்ளதாகவும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடல், அந்நாட்டின் சிந்தனையாளர்கள் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை, வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், ஜூன் 4ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இந்திய அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Rahul Gandhi : நாடாளுமன்ற திறப்பை தனக்கான பட்டாபிஷேகமாக கருதுகிறார்.. ராகுல் காந்தி விமர்சனம்!