வாரணாசி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியும், வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் ராய் இன்று (ஆக.18) தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் இவ்விருவரின் வெற்றிக்காகவும் காங்கிரஸ் தொண்டர்கள் நன்கு உழைப்பார்கள் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ளார். கடந்த முறை அமேதி தொகுதி மக்களுக்கு ரூ.13-க்கு சர்க்கரை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றினாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசம் மாநிலம், அமேதி மற்றும் கேரளா மாநிலம், வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதனைத்தொடர்ந்து, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். இதனால், பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சிக்கும் காந்தி குடும்பத்திற்கும் கோட்டையாக விளங்கிய அமேதி தொகுதி பாஜகவின் வசமானது.
இதையும் படிங்க: Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல் காந்திக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் எம்பி பதவியை மீண்டும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா முறையாக வழங்கினார். இதனைத்தொடர்ந்து நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மணிப்பூர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறியதாகப் பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக அரசு மீதும் பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இது குறித்து பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்த ராகுல் காந்தி தற்போது, லடாக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அஜய் ராயும் நரேந்திர மோடியும் வாரணாசி தொகுதியில் களம் கண்ட நிலையில் தேர்தலில் மோடி வெற்றிபெற்றார். இந்த நிலையில், சமீபத்தில் அஜய் ராயை உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tirupati Temple: சிறுத்தைகளை விரட்ட குச்சிகளை கொடுக்கும் திருப்பதி தேவஸ்தானம்..