நாட்டின் தலைநகர் டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு பொய்களைப் பரப்பி கொள்ளையடித்துவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அரசு தெரிவித்தது. ஆனால், அவர்களது நண்பர்களின் வருமானம்தான் நான்கு மடங்கு அதிகரித்தது. இதற்கு, நேர்மாறாக விவசாயிகளின் ஊதியம் பாதியாக குறைந்தது. சூட்டு பூட்டு போட்டுக்கொண்டு பொய்களைப் பரப்பி கொள்ளையடிக்கும் அரசு" எனப் பதிவிட்டுள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடிவருவது ஏழாவது நாளை எட்டியுள்ளது. டெல்லியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சாந்த் நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், பிரிதிநிதிகள் அதனை ஏற்கவில்லை.