ஹைதராபாத்: ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா அரசியல் களத்தில் ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இன்று தெலங்கானா மாநிலத்தில் பூபாபபள்ளி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில், வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிஆர்எஸ் மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், “தெலங்கானாவில் நடக்கவுள்ள தேர்தல் தெலங்கானா நிலபிரபுக்களுக்கும், தெலங்கானா பொதுமக்களுக்கும் இடையில் நடக்க உள்ளது. இதில் பொதுமக்கள் வெல்வார்கள் என நம்புகிறேன். ஊழல் நிறைந்த அரசு தெலங்கானாவில் உள்ளது. பிஆர்எஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான்.
எதிர்கட்சி தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறையைக் கொண்டு பாஜக சோதனை நடத்துகிறது. ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து கேசிஆர் காப்பாற்றப்பட்டுள்ளார். கேசிஆர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதியாதது சந்தேகங்களை எழுப்புகிறது.
பாஜக கொண்டுவந்த ஒவ்வொரு சட்டங்களையும் பிஆர்எஸ் ஆதரித்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும் பிஆர்எஸ் ஆதரித்துள்ளது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பது முக்கியமானது. தெலங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். சத்தீஸ்கர், ராஜஸ்தான் கர்நாடகா மாநிலங்களில் நாங்கள் ஏற்கனே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளோம். தெலங்கானாவிலும் அதைச் செய்வோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு எக்ஸ்ரே போன்றது. அது எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினரின் சதவீதத்தை வெளிப்படுத்து. தெலங்கானாவிற்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட உடன் முதலமைச்சரின் குடும்பத்தினரால் எவ்வளாவு கொள்ளையடிக்கப்பட்டது எனத் தெரியவரும்.
பிஆர்எஸ், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டு சேர்ந்து கூட்டுத் தாக்குதலை நடத்துகிறது. காங்கிரஸ். பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் கேசிஆர் உரை நிகழ்த்தும்போது, எப்போது ஜாதிக் கணக்கெடுப்பு கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறார்கள் என்று தெலங்கானா மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மோடியும் அதானியும் நல்ல நண்பர்கள், அதானி பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதானி வாங்கிய கடனை பாஜக தள்ளுபடி செய்கிறது. ஆனால் பெண்கள் சுயதொழில் செய்வதற்கு வாங்கிய கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை. நாட்டில் மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பாஜக ஜிஎஸ்டி வசூல் செய்கிறது. வரி வசூல் செய்யப்பட்டு அதானிக்கு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளின் கடன் ஏன் தள்ளுபடி செய்யப்படவில்லை. வருகின்ற தேர்தலில் ஏழை மற்றும் விவசாயிகளின் ஆட்சி அமைக்கப்படும். கேசிஆரும், அவரது பரிவாரங்களும் மாநிலத்தின் செல்வத்தை அப்படி கொள்ளை அடித்தார்கள் என்று மக்கள் முன் வைப்போம்.
கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் சுகாதார காப்பீட்டின் கீழ் அனைவருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தலித்துகலிக்கு 3 ஏக்கர் நிலம் தருவதாக கேசிஆர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியவர், தெலங்கானாவில் அறிவிக்கப்பட்ட 6 வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த உடன் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவராகக் குமாரசாமி; தேவகவுடா நியமித்தார்!