டெல்லி: ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்த நாள் இன்று. ராஜிவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். 1981 பிப்ரவரி மாதம், உத்தரப்பிரதேசத்திலுள்ள, அமேதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசியல் வாழ்வில் நுழைந்தார்.
அதைத்தொடர்ந்து, ராஜிவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு, அவரது தாயும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின் இந்திய பிரதமரானார்.
அப்போது அவருக்கு வயது 40. அப்படி, இந்தியாவின் 7ஆவது பிரதமராக 1984 முதல் 1989 வரை பதவி வகித்தார். 1989 தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்தவர், தற்கொலைப் படை தாக்குதலால் கொல்லப்பட்டார்.
தற்போது அவரின் 77ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாப்பட்டுவருகிறது. இதையொட்டி அவரது சிலை, உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில், அவரது மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, நாடாளுமன்ற இல்லத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - கே.எஸ்.அழகிரி கண்டனம்