டெல்லி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் அரசு மாளிகை ஒதுக்கப்பட்டு உள்ளது. மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலகம் அவரது எம்.பி பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ஒரு மாதம் கெடு விதித்து மக்களவை செயலகம் நோட்டீஸ் வழங்கியது. இதையடுத்து டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்தார். இந்நிலையில் மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்ட நிலையில் மக்களவை நடவடிக்கைகளில் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த 12 துக்ளக் லேனில் உள்ள இல்லத்தையே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே மீண்டும அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவும் தனது வீடு என்றும் தெரிவித்தார். இதன் மூலம் கடந்த 19 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வரும் தன் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மூன்று மாத இடைவெளியில் மீண்டும் ராகுல் காந்தி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமரை வரவழைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்... திருக்குறள் குறித்து பேசும் பிரதமர் தமிழ்நாட்டிற்கு.. டி.ஆர். பாலு அதிரடி!