சோனிபட் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரியானா மாநிலம் சோனிப்பட்டில் வயல்வெளியில் இறங்கி நடவு செய்வதும், டிராக்டர் ஓட்டுவதும், விவசாயிகளுடன் கலந்துரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு சாலை மார்க்கமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றார். அரியானா மாநிலம் வழியாக சென்ற அவர் அங்குள்ள சோனிபட் மாவட்டம் மதினா கிராமத்திற்கு சென்றார். அங்கு விவசாயிகள் நடவு பணிக்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
இதைக் கண்ட ராகுல் காந்தி தனது காரை உடனடியாக நிறுத்தி வயல்வெளியை நோக்கி சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும் வயல்வெளியில் டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடவு செய்தார். முன்னதாக ராகுல் காந்தி விவசாயிகளை சந்திக்க வயலுக்கு செல்லும் பாதை சேறும், சகதியும் நிறைந்து காணப்பட்டது.
தனது பேண்ட்டை முழுங்கால் வரை மடக்கி வைத்து கொண்ட ராகுல் காந்தி, தான் அணிந்து இருந்த ஷூவை கழற்றி கையில் வைத்தபடி சென்றார். வயலில் நடவு பணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களது குறைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த மே மாதம் இறுதியில் லாரி டிரைவர், கிளீனர்களின் குறைகளை அறிந்து கொள்ளும் வகையில் ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்தார். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு ராகுல் காந்தி காரில் சென்றபோது தான் இந்த சம்பவமும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி, அது முதலே பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : RN Ravi: உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!