பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியின் விருப்பத்தின் பேரில், கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.
இவருக்கும் முதலமைச்சர் அமரீந்தருக்கும் பனிப்போர் நிலவிவந்தது. அமரீந்தர் தலைமையிலான ஆட்சியை பொதுவெளியில் சித்து விமர்சித்துவந்த நிலையில், இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அமரீந்தர் தொடர்ந்து புகார் அளித்துவந்தார்.
ஆனால் ராகுலின் ஆதரவு சித்துவின் பக்கம் இருந்ததால் அமரீந்தருக்கு தொடர் நெருக்கடி இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று மாலை கட்சி மேலிடத்தின் வலியுறுத்தலின் பேரில் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மும்முரம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். ராகுலுடன் மூத்த தலைவர் அம்பிகா சோனி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைமை கூறும் நபரையே முதலமைச்சராக தேர்வு செய்யவுள்ளோம் என பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். எனவே, ராகுல் காந்தி முடிவு செய்யும் நபரே பஞ்சாபின் அடுத்த முதலமைச்சராக இருக்கப்போகிறார்.
இன்று மாலையில் புதிய முதலமைச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் தேவை - சசி தரூர் குரல்