டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று (டிசம்பர் 25) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் டெல்லியிலேயே தொடங்கி பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீருக்கு சென்று ஜனவரி 26ஆம் தேதி முடிவடைகிறது. செப்.7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த நடைப்பயணம் ராஜஸ்தானில் உள்ள தௌசாவில் 100ஆவது நாளை எட்டியது. அப்போது 8 மாநிலங்கள் வழியாக 2 ஆயிரத்து 800 கி.மீ கடந்திருந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து உத்தரப் பிரதேசத்தை எட்டியது.
ராகுல் காந்தி 108ஆவது நாளான நேற்று (டிசம்பர் 25) பதர்பூர் வழியாக தலைநகர் டெல்லியை அடைந்தார். இதனிடையே அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நடைப்பயணத்தில் கலந்துகொண்டார். நேற்று மதியம் செங்கோட்டையில் ராகுல் காந்தியின் அன்றைய பயணம் முடித்தது. முன்னதாகவே, 8 நாள்கள் தேசிய ஒற்றுமை நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நிறுத்தப்பட்டது. ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்று ஜனவரி 26ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக ராகுல் காந்தி நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இதையும் படிங்க: சீனாப் பயணத்துக்கு பின் உத்தரப் பிரதேச தொழிலதிபருக்கு கரோனா தொற்று உறுதி